அமர்நாத் விவகாரம்: இன்று நான்காவது சுற்றுப் பேச்சு!
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (13:02 IST)
ஸ்ரீ அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு மீண்டும் நிலம் வழங்க வேண்டும் என்று கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும் ஜம்மு- காஷ்மீர் மாநில அளுநர் அமைத்துள்ள எஸ்.எஸ். புளோரியா தலைமையிலான குழுவிற்கும் இடையில் இன்று நான்காவது சுற்றுப் பேச்சு நடக்கவுள்ளது.
ஜம்முவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று மாலை 4.30 மணியளவில் நடக்கவுள்ள நான்காவது சுற்றுப் பேச்சில் பங்கேற்குமாறு ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் சர்மாவிற்கு அழைப்பு வந்துள்ளதாக அதன் பேச்சாளர் நரீந்தர் சிங் தெரிவித்தார்.
தாங்கள் ஏற்கெனவே தங்களின் கோரிக்கைகளை ஆளுநர் குழுவின் முன்பு எழுத்துபூர்வமாகச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றின் மீது தங்களுக்குச் சாதகமான பதிலை எதிர்பார்த்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திலக் ராஜ் சர்மா, பிரிகேடியர் சச்செட் சிங், நரீந்தர் சிங், பவன் கோஹ்லி ஆகியோர் கொண்ட ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதியின் குழுவினர், ஆளுநர் அமைத்துள்ள குழுவுடன் ஏற்கெனவே மூன்று சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்த மூன்று சுற்றுப் பேச்சுக்களும், தொடர்ந்து விவாதிப்பது என்ற முடிவுடன் பிரச்சனைக்குத் தீர்வின்றி முடிந்தன.