காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம்: அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (20:02 IST)
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு நீடித்ததால் பதற்றம் நிலவியது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதிருப்தியடைந்த பொது மக்கள் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறைகள், அவற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றால் தொடர்ந்து 59 ஆவது நாளாக ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய நகரங்களில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு இன்று நான்காவது நாளாகத் தளர்வின்றி நீட்டிக்கப்பட்டதால், பொது மக்கள் மிகுந்த அதிருப்தியடைந்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, குறிப்பிட்ட சில பகுதிகளைத் தேர்வு செய்து சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருவதன் அடிப்படையில், பட்காம், குப்வாரா, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 3 மணி முதல் 2 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு!
அப்போது ரைனாவாரி என்ற இடத்தில் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொது மக்களின் மீது காவலர்கள் தடியடி நடத்தியதாகவும், இதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!
ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால், காய்கறிகள், ரொட்டி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தங்களுக்குச் சரிவரக் கிடைக்கவில்லை என்று கூறி பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ஆளுநர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகையில் பொது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளும் பொருட்டுக் கடைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் திறந்து வைக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பால் கூட்டுறவு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், பள்ளத்தாக்கு முழுவதும் தட்டுப்பாடில்லாமல் பால் வினியோகம் நடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தாலும், பல்வேறு இடங்களில் தங்களின் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூட பால் இல்லை என்றும், பால்காரர்களைக் கூடப் பாதுகாப்புப் படையினர் அனுமதிப்பது இல்லை என்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை!
ஊரடங்கு உத்தரவினால் பெரும்பாலான மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், சிலவற்றில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும், இன்னும் சிலவற்றில் சிகிச்சை முடிந்த நோயாளிகள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழலும் உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையுடன் மருந்துப் பற்றாக்குறையும் உள்ளது. இருக்கும் சில மருத்துவர்களும் ஊழியர்களும் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனர்.
சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று முடிந்த நோயாளிகள் பலர் வீடுகளுக்குத் திரும்புவதில் பாதுகாப்பில்லை என்று கருதி, மருத்துவமனைகளிலேயே தங்கியுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின் செயல்பாடு முடங்கியது!
ஜம்மு- காஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக உள்ளூர் ஊடகங்களின் செயல்பாடு முழுமையாக முடங்கியுள்ளது.
கிரேட்டர் காஷ்மீர், ரைசிங் காஷ்மீர் ஆகிய இரண்டு ஊடகங்கள் மட்டும் தங்களது இணைய தளத்தின் வழியாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஜம்முவில் இருந்து சில நாளிதழ்கள் காஷ்மீருக்குக் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
தேசியத் தொலைக்காட்சிகள், பி.பி.சி. மற்றும் காஷ்மீர் வானொலி ஆகியவைதான் தற்போது காஷ்மீர் மக்களுக்குத் தகவல் தரும் ஒரே ஊடகங்களாகும்.
ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கி வரும் 40 க்கும் மேற்பட்ட ஆங்கிலம், உருது மொழி உள்ளூர் நாளிதழ்களின் அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.