ஜம்முவில் பிணையக் கைதிகளை மீட்க தொடர்ந்து மோதல்: 6 பேர் பலி!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:34 IST)
பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்த தீவிரவாதிகளுடன், அவர்கள் பிணையக் கைதிகளாப் பிடித்து வைத்துள்ள அப்பாவி மக்களை மீட்பதற்காக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இதுவரை ராணுவ அதிகாரி ஒருவர், தீவிரவாதி ஒருவன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கனசாக் எல்லை வழியாக ஜம்முவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் சிலர், சினோர் என்ற இடத்தில் உள்ள வீட்டில் நுழைந்து அங்கிருப்பவர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
தீவிரவாதிகளிடம் இருந்து பிணையக் கைதிகளை விடுவிக்க பாதுகாப்புப் படையினர் முயற்சி மேற்கொண்டபோது, இரு தரப்பிற்கும் இடையில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவரும், தீவிரவாதி ஒருவனும் கொல்லப்பட்டுள்ளதாகவும், சண்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் பாதுகாப்புப் பேச்சாளர் லெப்டினன்ட் கலோனல் எஸ்.டி.கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் நடத்தியுள்ள துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள வீட்டில் 12 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இருப்பதால், உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கும் வகையில் கவனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இது முடிய நீண்ட நேரம் தேவைப்படும் என்றும் ஜம்மு- காஷ்மீர் ஐ.ஜி. கே.ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.