காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: 4 எல்லைப் பாதுகாப்புப் படையினர் காயம்!
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:41 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் சப்ஜியான் என்ற இடத்தில் இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் படையினர் சுட்டதாகவும், இதில் நமது எல்லைப் பாதுகாப்புப் படையின் 4 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ள அதிகாரிகள், பாகிஸ்தான் படையினர் தாக்கியபோதும், நமது படையினர் எந்தவித எதிர்த்தாக்குதலையும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் உள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 31 முறை பாகிஸ்தான் தரப்பில் மீறியுள்ளனர். இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் இந்தியா எந்தவித எதிர்த்தாக்குதலையும் நடத்தவில்லை.
இந்த மாதத்தில் கடந்த 21 ஆம் தேதி ராஜூரி மாவட்டத்தில் நெளசெரா எல்லையில் உள்ள ஜங்கர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படையினரும், 11 ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் சப்ஜியான் என்ற இடத்தில் பாகிஸ்தான் சுற்றுக்காவல் வீரர்களும் எறிகணைகளை வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து பெருமளவிலான தீவிரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவும் அபாயம் உள்ள, ராஜூரி, பூஞ்ச், சம்பா, உரி, டங்தார், பகுதிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறியுள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் ஜம்மு- காஷ்மீர் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளதையொட்டி, அம்மாநிலத்திற்குள் அதிக அளவில் ஊடுருவ முயற்சிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டுப் படையினர் உதவுவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.