மொபைல் டிவி தொழில்நுட்பம்: தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க முடிவு!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:23 IST)
மொபைல் டிவி தொழில்நுட்ப சோதனையில் தனியார் மொபைல் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கொள்கை வரையறை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.

தற்போது மொபைல் டிவி சேவையை அரசு தொலைகாட்சி நிறுவனமான தூர்தர்ஷன் மட்டுமே அளித்து வருகிறது. கடந்தாண்டு துவங்கப்பட்ட இச்சேவையில் தற்போது 8 சேனல்கள் வழங்கப்படுகிறது.

டெல்லியில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் இச்சேவையை டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங்-ஹேன்ட் ஹெல்ட் (டி.வி.பி-ஹெச்) வசதியை உள்ளடக்கிய செல்போன்களில் மட்டுமே பார்க்க முடியும். பிரபல செல்போன் நிறுவனங்களான நோக்கியா, சாம்சங் ஆகியவை டி.வி.பி-ஹெச் (DVB-H) வசதியை உள்ளடக்கிய மொபைல்போன்களை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

மொபைல் டிவி தொழில்நுட்பம் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சியடைய உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், இச்சேவையை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எளிதில் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் (டிராய்) மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாகவே மொபைல் டிவி சேவையில் தனியாருக்கும் அனுமதி வழங்க டிராய் முடிவு செய்துள்ளதாக தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதன்படி தனியார் நிறுவனங்களுக்கும் மொபைல் டிவி தொழில்நுட்பம் வழங்கும் சேவையை அளிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள டிராய், அனைவருக்கும் நடுநிலையான வகையில் இச்சேவை கிடைக்க வேண்டும் என்றும், இச்சேவை பெறும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்காக புதிய செல்போன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேபோல் இச்சேவையை வழங்குவதற்கான உரிமையை அளிக்கும் விஷயத்தில் ஏல முறையை பின்பற்றவும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. எனினும், மொபைல் டிவி சேவை வழங்கும் உரிமையை பெறும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்