ஜம்முவில் மீண்டும் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு!
புதன், 20 ஆகஸ்ட் 2008 (14:28 IST)
நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் நடக்கும் போராட்டங்களால் ஜம்முவில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. வழக்கமாக ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் கேனல் சாலை, ஜெவெல் செளக், பக்ஷி நகர், நியூ பிளாட், ஜனிப்பூர் உள்ளிட்ட பழைய ஜம்மு நகரப் பகுதிகளில் நேற்றிரவு பெருமளவில் போராட்டங்கள் நடந்தன. இதனால் அப்பகுதிகளில் இன்று காலை ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி நடத்தி வரும் சிறை நிரப்பும் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. நேற்று நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் இயல்பு நிலை நீடித்த காரணத்தால், அங்கு மட்டும் காலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.