கவிழ்கிறது ஜார்க்கண்ட் அரசு?

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 (16:30 IST)
ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என்று சிபுசோரன் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மதுகோடா அரசு கவிழ்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது சிபு சோரனின் 'ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா', அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதற்கு கைமாறாக ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியை தனக்கு விட்டுத் தர வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தாக செய்திகள் வெளியாகின.

இதை உறுதி செய்யும் வகையில், தற்போது ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை கேட்டு மத்திய அரசுக்கு அவர் நிர்பந்தம் அளித்து வருகிறார்.

இதுவரை தனது கோரிக்கை ஏற்கபடாததால் கோபமடைந்துள்ள சிபு சோரன், காங்கிரஸ் ஆதரவுடன் பதவியில் உள்ள மதுகோடா அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜார்கண்ட் ஆளுனர் சையது சப்தே ரஸியை ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை சந்தித்து ஆதரவு திரும்பப் பெறுவது தொடர்பான கடிதத்தை அளிக்கவும் சிபுசோரன் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபு சோரன், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்வதா? வேண்டாமா? என்பது ஞாயிற்றுக் கிழமை இரவுக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என்றார்.

எனவே, காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்தி வந்த மதுகோடா அரசு கவிழ்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்ற தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்