ரக்ஷா பந்தன்: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (17:01 IST)
சகோதரத்துவத்தை உணர்த்தும் 'ரக்ஷா பந்தன்' விழா, நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று 'ரக்ஷா பந்தன்' எனப்படும் ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. தாங்கள் சகோதரராகக் கருதுவோர் கையில் ராக்கி எனப்படும் மஞ்சள் கையிறைக் கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவது இந்நாளின் சிறப்பம்சம்.

ரக்ஷா பந்தனை ஒட்டி பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவற்ற இல்லத்தத்தைச் சேர்ந்த உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிரதமருக்கு ரக்ஷா பந்தன் கையிறைக் கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

இக்குழந்தைகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது மனைவி குருஷரன் கவுரும், இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர்.

வட இந்தியப் பண்டிகையான ரக்ஷா பந்தன், தற்போது தென்னகத்திலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ- மாணவியர் உற்சாகத்துடன் ராக்கி கயிறு கட்டி, ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்