ஜம்மு நிலவரம்: பிரதமர் ஆலோசனை!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (15:08 IST)
புதுடெல்லி: அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி உள்ளிட்டோருடன் புதுடெல்லியில் இன்று காலை தீவிர ஆலோசனை நடத்திய பிரதமர், அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரத்தில் இரு தரப்பும் ஏற்கும் வகையில் தீர்வு கொண்டு வருவது குறித்து விரிவாக விவாதித்தார்.

முன்னதாக, இதே பிரச்சனைக்காக புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு நேற்றிரவு கூடி விவாதித்தது.

ஜம்மு - காஷ்மீரில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும், இப்பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண்பது குறித்தும் முன்னாள் முதலமைச்சர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் ஆகியோருடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.

இதேபோல், சுதந்திர தினத்தை ஒட்டி புதுடெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையிலும், ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்