அமர்நாத் பிரச்சனை: அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட பிரதமர் வலியுறுத்தல்!

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
PTI PhotoFILE
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் பிரச்சனையை காரணம் காட்டி அம்மாநில மக்களை மதம், இனத்தால் பிளவுபடுத்தி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர், இப்பிரச்சனையை சுமுகமாக தீர்க்க அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நாட்டின் 62வது சுதந்திர தினமான இன்று, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய போது பிரதமர் மன்மோகன்சிங் இதனைத் தெரிவித்தார். முன்னதாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களையும், இந்த தினத்தை சுதந்திர தியாகிகளுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறினார்.

சுமார் 45 நிமிடங்கள் நீட்டித்த பிரதமர் உரையில், விலைவாசி கட்டுப்படுத்துதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைத்ததை விடவும் கூடுதல் சலுகைகள் அளித்தது, சமீபத்தில் இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள், நாட்டை மதச்சார்பற்ற வகையில் வளர்ச்சி பெற வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன.

இந்தாண்டுக்குள் சந்திரேயன்-1: இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலமான சந்திரேயன்-1 வரும் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், இந்திய விண்வெளி அத்தியாயத்தில் சந்திரேயன்-1 முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றார்.

இந்த விண்கலம் சுமார் 2 ஆண்டுகள் சந்திரனை வலம் வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் என்றும், ரஷ்யாவுடனான கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் இந்த விண்கலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே ஏற்கனவே கையெழுத்தாகி உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இதேபோல் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா தொடர முடியாது என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் இடம்பெறவில்லை: பிரதமரின் சுதந்திரதின உரையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இடம்பெறவில்லை.

வளர்ந்த நாடுகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் இத்துறையில் இந்தியா தனிப்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்று இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் பிரதமர் பேசினார்.

இதேபோல் சூரிய சக்தி, காற்றில் இருந்து மின்சாரம் தயாரித்தல், பயோ-கேஸ் (bio-gas) மற்றும் இதர எரிசக்தி வளங்களை இன்னும் சிறப்பாக பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் கண்டறிய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்