அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காண ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார்.
தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஹூம் ராவுத்தர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, பா.ஜ.க.வின் சோஃபி யூசுப், தேச சிறுத்தைகள் கட்சியின் பஷீர் அகமது கூத்து, மார்க்ஸிஸ்ட் கட்சியின் தாரிகாமி, மக்கள் ஜனநாயக முன்னனியின் ஹக்கீம் மொஹம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தவிர, காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ரியாஸ் பஞ்சாபி, இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சித்திக் வாஹித் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்றும், நேற்று முன் தினமும் காஷ்மீர் பகுதியில் நடந்த வன்முறை, துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும் நடந்த இக்கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.