மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 விழுக்காடு ஊதிய உயர்வு!
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (14:38 IST)
மத்திய அரசு ஊழியர்கள், இராணுவத்தினர் ஆகியோரது ஊதிய உயர்வு தொடர்பாக ஆறாவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு, சில மாறுதல்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு சராசரியாக 21 விழுக்காடு ஊதிய உயர்வு கடந்த 2006, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று இன்று பிரதமர் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையிலான ஆறாவது ஊதியக் குழு அளித்துள்ள பரிந்துரையில், முதல்நிலை அரசு ஊழியருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,600 ஆக உயர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மத்திய அரசு ரூ.7,000 ஆக உயர்த்தியுள்ளது.