ரூ. 34 கோடி வருமான வரி கட்டிய ஷாருக்கான்; மாயாவதி ரூ. 26 கோடி

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2008 (14:23 IST)
பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த நிதியாண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்ததில், ரூ. 34 கோடி வரி செலுத்தி இருக்கிறார். உத்தரப்பிரதே முதல்வர் மாயாவதி 26 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார்.

அதிகமாக வருமான வரி கட்டிய 200 பேர் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதிக வருமான வரி கட்டுபவர்களில் முதல் 10 பேரில் 5 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். 2 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள்.

நடிகர்களில் ஷாரூக்கான் ரூ.34 கோடியே 19 லட்சம் வருமான வரி செலுத்தி, 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி ரூ.26 கோடியே 26 லட்சம் கட்டி 18-ஆவது இடத்தில் உள்ளார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக்பச்சன், மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோரை விடவும் அதிக வருமான வரி கட்டியுள்ளார். ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் ஆகியோர் தலா ரூ.5 கோடியே 62 லட்ச மும், அமிதாப்பச்சன் ரூ.5 கோடியே 56 லட்சமும், செலுத்தி உள்ளனர். அபிஷேக் பச்சனைவிட ஐஸ்வர்யாராய் ரூ.75 ஆயிரம் அதிகமாக கட்டி உள்ளார்.

விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், ரூ.8 கோடியே 80 லட்சம் வரி செலுத்தி இருக்கிறார். அவருக்கு 81-ஆவது இடம் கிடைத்து உள்ளது.

தொழிலதிபர்களில் அனில்ஜித்சிங் ரூ.31 கோடியே 49 லட்சமும், அம்பானி மனைவி கோகிலா ரூ.4 கோடியே 46 லட்சமும்,. ஆசிம் பிரேம்ஜி ரூ.4 கோடியே 68 லட்சமும் கட்டி உள்ளனர்.

முன்னணி தொழில் அதிபர் சகோதரர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் முதல் 200 பேர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்