சமாஜ்வாடி ஆதரவிற்கு வழக்குகளே காரணம்: மார்க்சிஸ்ட்!
சனி, 2 ஆகஸ்ட் 2008 (15:33 IST)
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிற்குச் சமாஜ்வாடி அளித்துள்ள திடீர் ஆதரவிற்கு, அக்கட்சியின் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், அமர்சிங் ஆகியோரின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
மத்திய அரசிற்கு ஆதரவு அளிப்பதென்று சமாஜ்வாடி எடுத்த திடீர் முடிவிற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில், சமாஜ்வாடியின் முடிவிற்குப் பின்னால் கார்பரேட் நிறுவனங்களின் நலன்களும், முலாயம் சிங், அமர்சிங் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தலைவர்கள் மீதுள்ள வழக்குகளும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பதைக் கண்டு கலக்கமடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, அடுத்த மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சமாஜ்வாடியின் ஆதரவைப் பெறுவதற்கு விரும்புகிறது என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
மக்களவைக்கு உடனடியாகத் தேர்தல் வந்தால் தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதால், தேர்தலைத் தள்ளிப்போட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு விரும்பியதும், சமாஜ்வாடியின் துரோகத்தை மறந்து காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.