சார்க் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு சென்றார் பிரதமர்!
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:19 IST)
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நாளை துவங்க உள்ள தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் (சார்க்) பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று சிறிலங்கா சென்றார்.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இன்று மாலை பிரதமர் பேச்சு நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய தொழில் வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து சார்க் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக சார்க் அமைப்பில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சார்க் மாநாட்டிற்கு வரும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஷா கிலானியுடன், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.