இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்த வரைவு: ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர் குழு இன்று பரிசீலனை!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:20 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இந்தியா உருவாக்கி அளித்துள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவை பன்னாட்டு அணு சக்தி முகமையின் (International Atomic Energy Agency - IAEA) ஆளுநர்கள் குழு இன்று பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னாட்டு அணு சக்தி முகமையின் 35 ஆளுநர்களும் இந்தியாவின் வருகையை வரவேற்றாலும், அணு சக்தி பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத ஒரு நாடான இந்தியா, உருவாக்கி அளித்துள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவில் உள்ள சில ‘சலுகைகள’ தொடர்பாக கேள்விகள் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னாட்டு அணு சக்தி முகமையின் உறுப்பினர்களாக உள்ள சில நாடுகள், அணு சக்தி பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) இந்தியா விரைவில் கையெழுத்திடவேண்டுமென வலியுறுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆயினும், எந்த ஒரு நாடும் இந்தியாவின் ஒப்பந்த வரைவு எதிர்க்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் குழு இந்தியாவின் தனித்த கண்காணிப்பு ஒப்பந்த வரைவிற்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்டால், அதன் மூலம் 5 வல்லரசுக‌ள் அல்லாத, அணு ஆயுதங்கள் கொண்ட ஒரு நாட்டை அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஏற்கப்படும் முதல் நாடாக இந்தியா ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்