பெங்களூரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒருவர் பலியானதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் நகரத்தில் உள்ள ரிச்மண்ட் வளைவு மற்றும் லாங்ஃபோர்ட் சாலை, மல்லய்யா மருத்துவமனை, நயந்தஹல்லி, மடிவாலா, அடுகொடி, ஒசூர் சாலை ஆகிய 7 இடங்களில் இன்று மதியம் 1.30 மணியளவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.
2 முதல் 12 நிமிட இடைவெளியில் நடந்துள்ள இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை அடுத்து பெங்களூர் நகரம் முழுவதும் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளன.
இந்தக் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் யார் என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகமான போரம் மால் கட்டடத்திற்குப் பின்னால் உள்ள மடிவாலா சோதனைச் சாவடியில் முதல் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. புறநகரில் உள்ள நயந்தஹல்லி, அடுகொடி ஆகிய பகுதிகளில் முறையே இரண்டாவது, மூன்றாவது குண்டுகள் வெடித்துள்ளன.
இந்தக் குண்டு வெடிப்புகளில் கல் குவாரிகளில் பயன்படும் சாதாரண ஜெலட்டின் குச்சியும், வெடி உப்பும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.