பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மக்களவைச் செயலகம் உத்தரவு!
வியாழன், 24 ஜூலை 2008 (16:19 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றம்சாற்றிய பா.ஜ.க. எம்.பி.க்கள் மூவரும் தங்களின் குற்றச்சாற்றை முறைப்படி புகாராக அளிக்க வேண்டும் என்று மக்களவைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க. எம்.பி.க்கள் அசோக் அர்கால், மகாவீர் பகோரா, பாகன் சிங் குல்ஸ்டே ஆபிய மூவருக்கும் நேற்றிரவு மக்களவைச் செயலம் அனுப்பியுள்ள உத்தரவில், அவர்கள் தங்களின் குற்றச்சாற்றைப் புகாராக அளித்தால் அதை வழக்காக முன்னெடுத்துச்செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 22 ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து கொண்டிந்தபோது, மேற்கண்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் மூவரும் அவையின் மையத்திற்கு வந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்கு ஆதரவாகத் தாங்கள் வாக்களிக்க வேண்டி சமாஜ்வாடி கட்சியினர் ரூ.3 கோடி லஞ்சம் தருவதாகக் கூறியதுடன், அதில் ரூ.1 கோடியை லஞ்சமாகக் கொடுத்தனர் என்று குற்றம்சாற்றியதுடன், தாங்கள் கொண்டுவந்திருந்த பணத்தை எடுத்துக்காட்டினர்.
இந்தக் குற்றச்சாற்றின் மீது உரிய விசாரணை நடத்தி, யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நேற்று அறிவித்திருந்தார்.
ஜூலை 22, மக்களவை வரலாற்றில் மிகவும் மோசமான நாள் என்றும், இதுபோன்று இனி எப்போதும் நடக்காதவாறு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.