நம்பிக்கை வாக்கெடுப்பு : கட்சிகளின் நிலை

ஞாயிறு, 20 ஜூலை 2008 (15:28 IST)
நாடாளுமன்றத்தில் 22ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி திமுக, பாமக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும்.

அதுபோல ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் சிபு சோரன், இன்று தனது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய சிபு சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரளாவைச் சேர்ந்தவருமான வீரேந்திர குமார் பேசுகையில், 22ஆம் தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ராஷ்ட்டிய லோக் தளக் கட்சியின் தலைவர் அஜித் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவே எங்களது கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

திமுக கட்சியும், அதன் தலைமையும் எடுக்கும் முடிவிற்கு இணங்க தானும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே வாக்களிக்க உள்ளதாக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று பிடிஐ செய்தியாளர்களிடம் பேசிய அசாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி, எந்த பிரச்சினையையும் நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். எங்களது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண் சர்மா, சர்பானாந்தா சோனோவால் இருவரும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்