பிரதமர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: காங்கிரஸ்!
சனி, 19 ஜூலை 2008 (16:35 IST)
நாடளுமன்றத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. வாக்கெடுப்பில் அரசு நிச்சயம் வெற்றிபெரும் என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லியிடம், மக்களவையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியில் இருந்து விலகும் எண்ணம் ஏதும் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த மொய்லி, இது போன்ற கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பிரதமர் வெற்றிபெறுவார் என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அவரது இல்லத்தில் ஆலோசனை செய்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, மரியாதைநிமித்தம் என்பதையும் தாண்டி அவரை எம்.பி.க்கள் சந்தித்தனர். அணு சக்தி ஒப்பந்தத்தால் உண்டாகும் நன்மைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறும் அளவுக்கு எம்.பி.க்கள் அனைவரும் அரசியல் அனுபவம் முதிர்ந்தவர்கள்தான் என்றார்.
சிவ சேனா, அகாலி தளம், பா.ஜ.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பை தவிர்க்க நினைப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறிய அவர், அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் தற்போது கூட்டணியில் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இப்போதும் அவர்கள் ஐ.மு. கூட்டணியில்தான் இருக்கிறார்கள் என்றார்.
அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியின் ஆதரவு பற்றிய கேள்விக்கு, அஜித் சிங் சொந்தமாக முடிவெடுப்பார் என்று கூறினார்.