280 எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும்: மொய்லி!

சனி, 19 ஜூலை 2008 (12:20 IST)
மக்களவையில் 22ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு 280க்கும் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் என காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், இந்த செய்தி பா.ஜ.க, இடதுசாரி கட்சிகளுக்கு கசப்பானதாக இருக்கும் என்றார்.

ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவாக உள்ள எம்.பி.க்களின் துல்லியமான எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதற்கான பதிலை 22ஆம் தேதிக்கு பின்னர் அறிந்து கொள்வீர்கள் என்று மழுப்பலாக பதிலளித்தார்.

கர்நாடகா, ஹரியானா மாநில காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர் கட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டுள்ளதால், கட்சி மேலிடம் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும் என மொய்லி நம்பிக்கை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்