தீவிரவாதிகளின் கைகளில் பிரமுகர்களின் செல்பேசிகள்!
புதன், 16 ஜூலை 2008 (13:27 IST)
ஜம்மு- காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள தங்களின் தலைமை நிலையங்களில் இருந்து உத்தரவுகளைப் பெறுவதற்கும், தகவல் தொடர்பிற்கும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்பேசிகளைப் பயன்படுத்தி வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
"முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் உள்ளிட்ட 51 பிரமுகர்களின் செல்பேசிகளை தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களது தலைமை நிலையங்களுடன் தகவல் தொடர்புகொள்ளப் பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. அந்த எண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன" என்று பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
"முக்கியப் பிரமுகர்களின் செல்பேசி எண்களைத் தீவிரவாதிகள் பயன்படுத்துவது என்பது மிகத் தீவிரமான பிரச்சனை. குறிப்பிட்ட எண்கள் இயங்கும் இடங்களின் முகவரிகள் உள்ளிட்ட மற்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், குறிப்பிட்ட சில எண்களை கண்காணித்ததில் கிடைத்த விவரங்களின்படி தீவிரவாதிகள் தங்களின் இயங்கு எல்லைகளை விரிவுபடுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளின் தகவல் தொடர்பு எல்லைகள் ரியாசி, தோடா, உதம்பூர், ராஜெளரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் விரிவடைந்துள்ளது" என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தலைவன் ஃபரூக் அகமது நாயக் என்ற இம்ரான் லடூ முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரின் செல்பேசியில் இருந்து மூன்று முறை அழைப்புகளைப் பெற்றுள்ளான் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரின் பெயரை வெளியிடவில்லை.