உயிரி, அணு ஆயுத தாக்குதல்: நாடாளுமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு!
செவ்வாய், 15 ஜூலை 2008 (21:04 IST)
நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2001 டிசம்பர் 13ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளால் நாடாளுமன்ற வளாகம் தாக்குதலுக்கு உட்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கான பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது உயிரி மற்றும் அணு ஆயுதங்களின் அபாயம் அதிகரித்துள்ளதால், அவற்றில் இருந்து நாடாளுமன்றத்தைக் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு துவக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் உயிரி அல்லது அணு ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தலாம் என கடந்த 2 ஆண்டுகளாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வந்ததாகவும், இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பாதுகாப்பு பிரிவு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அணுஆயுத தாக்குதல்களை தாங்கக் கூடிய பாதுகாப்பு அறைகளை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்க உள்ளதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரி மற்றும் அணு ஆயுதங்களில் இருந்து வெளியேறும் கதிரியக்கத்தை தடுக்கும் சக்தி நாடாளுமன்ற பாதுகாப்பு அறைகளுக்கு உண்டு என்பதால், தாக்குதலின் போது நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால், நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான இடத்தில் வெளியேற சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட உள்ளது.