மானெ‌‌க் ஷாவுக்கு பாரத ரத்னா விருது?

செவ்வாய், 15 ஜூலை 2008 (16:40 IST)
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், ஃபீல்டு மார்ஷல் பட்டம் பெற்றவருமான சாம் மானெ‌க் ஷாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று சூசகமாக பதிலளித்துள்ளார்.

மானெ‌‌க் ஷாவுக்கு டெல்லியில் இன்று நினைவுக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அந்தோணி பேசிய போது, மறைந்த மானெ‌‌க் ஷாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மானெ‌‌க் ஷா மீது நாட்டு மக்கள் வைத்துள்ள மரியாதையை அரசு உணர்ந்துள்ளதாகவும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்றும் சூசகமாக அந்தோணி பதிலளித்தார்.

முன்னதாக நினைவுக் கூட்டத்தில் பேசிய அந்தோணி, மானெ‌‌க் ஷா தன்னிகரில்லாத தலைவர் என்றும், ராணுவ வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும், உந்து சக்தியாகவும் அவர் திகழ்ந்தார் என்றும் புகழாரம் சூட்டினார்.

நாட்டின் முதல் ஃபீல்டு மார்ஷல் பட்டம் பெற்ற சாம் மானெ‌‌க் ஷா, கடந்த மாதம் 27ஆம் தேதி, குன்னூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 94 வயதில் உயிரிழந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்