அணு சக்தி ஒப்பந்தம் அயலுறவுக் கொள்கையை பாதிக்காது: மன்மோகன் சிங்!
செவ்வாய், 15 ஜூலை 2008 (13:31 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நமது சுதந்திரமான அயலுறவு கொள்கைகளை பாதிக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தனது சுதந்திரமான அயலுறவுக் கொள்கைகளில் எந்தவிதமான தேவையற்ற தலையீடையும் இந்தியா அனுமதிக்காது என்ற பிரதமர், ஐ.மு.கூட்டணி அரசு மேற்கொள்ளும் முடிவுகளை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசிற்கு அளிந்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிய பிறகு முதன்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் ஐ.மு.கூட்டணியின் நிலைப்பாடு பற்றி விளக்கினார்.
அப்போது, "ஆளும் ஐ.மு.கூட்டணி அரசு மேற்கொள்ளும் முடிவுகளின் பின்னணியைப் புரிந்துகொண்டு மக்கள் அவற்றை அங்கீகரிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்ததாக" பின்னர் பிரதமரின் சார்பில் அவரது ஊடக ஆலோசகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்களை பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு உடன்பாடு பாதிக்கும் என்ற இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க. வினரின் குற்றச்சாற்றுக்களை பிரதமர் மறுத்துள்ளார்.
"பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரம்புக்கு அப்பாற்பட்ட நமது பாதுகாப்புத் திட்டங்களில் அந்த ஒப்பந்தம் தலையிடுவதற்கு வழியே இல்லை" என்று பிரதமர் கூறியுள்ளார்.
பன்னாட்டு அளவில் அணு சக்தி ஒத்துழைப்பு கிடைப்பதால் உருவாகும், உயர் தொழில்நுட்ப மேம்பாடு, எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளிடமும் இருந்து அணு சக்தி துறையில் ஒத்துழைப்பு பெறும் வழியை பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தம் உருவாக்குகிறது என்றார்.
சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இதில் அடக்கம் என்று குறிப்பிட்ட பிரதமர், பன்னாட்டு அணு சக்தி முகமை மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களை இறுதி செய்வதன் மூலம் அணு சக்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை முடிவிற்கு வந்துவிடும் என்றார்.