பிரதமருடன் முகேஷ் அம்பானி சந்திப்பு!

திங்கள், 14 ஜூலை 2008 (17:46 IST)
ரிலையன்ஸ் இன்டஷ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து அதிக இலாபம் மீது வரி விதிப்பது தவறானது என்பதை விளக்கினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் புதிய கூட்டாளியான முலாயங் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிசுக்கு சொந்தாமான பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபம் மீது வரி விதிக்க வேண்டும்.

ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி மண்டலம் என்ற சலுகையை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதே கோரிக்கையை முன்பு இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளையும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்தார். அப்போது அவர் பிரதமரிடம் அதிக இலாபத்தின் மீது வரி விதிக்க கோரிவது எப்படி தவறானது என்று விளக்கினார். இதற்கு பிறகு முகேஷ் அம்பானி, காங்கிரஸ் கட்சி தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை சந்தித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் இருந்து இன்று டில்லிக்கு வந்த முகேஷ் அம்பானி, மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் உட்பட பல உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது ரிலையன்ஸ் நிறுவனம் சட்டப்படிதான் இலாபம் சம்பாதிக்கிறது. இந்த இலாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என்பது மலிவான கோரிக்கை என்று முகேஷ் அம்பானி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த இலாபத்தின் மீது வரி விதிப்பது குறுகிய காலத்திற்கு வருவாய் கிடைப்பதாக இருக்கலாம். இந்த மாதிரியான நடவடிக்கை நீண்ட நோக்கில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று அவர் விளக்கியதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்