பாபர் மசூதி வழக்கு இன்று விசாரணை!
வெள்ளி, 11 ஜூலை 2008 (15:32 IST)
பாபர் மசூதி இடிப்பு வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இவ்வழக்கில் சாட்சியான அஸ்லாம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார். மொத்தம் 3 சாட்சிகளில் இரண்டு பேர் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு விட்டனர்.
இவ்வழக்கில் பா.ஜ.க. வின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், பாரதிய ஜனசக்தி கட்சித் தலைவர் உமா பாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கால், ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பரா ஆகிய 8 பேரின் மீது குற்றம்சாற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 2003 இல் அத்வானி மீதான குற்றச்சாற்றுக்களை ரேபரேலி நீதிமன்றம் நிராகரித்தது. மற்ற ஏழு பேரின் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று அறிவித்தது.
டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் உள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் கலவரத்தையும் தேசம் முழுவதும் பதற்றத்தையும் உண்டாக்கியது.