ஆதரவு விலக்கல்: பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் கடிதம்!

செவ்வாய், 8 ஜூலை 2008 (15:50 IST)
மத்திய அரசிற்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கியதற்கான காரணங்களை விளக்கி மத்திய அயலுறவு அமைச்சரும் அணசக்தி ஒப்பந்தம் மீதான ஐ.மு.கூ-இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:

ஜூலை 7, 2008 அன்று நீங்கள் அனுப்பிய கடிதத்தில், இந்திய-அமெரிக்க அணசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த ஐ.மு.கூ.-இடதுசாரிகள் உய‌ர்ம‌ட்ட‌க் குழு கூட்டம் ஜூலை 10-ஆம் தேதி நட‌க்கு‌ம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

நவம்பர் 16, 2007 அன்று நடைபெற்ற குழுவின் 6-வது கூட்டத்தில், ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) உடனான பேச்சு‌க்க‌ள் குறித்து நீங்கள் உறு‌திய‌ளி‌த்ததை நினைவுபடுத்த விரும்புகிறோம்: "மத்திய அரசு நட‌த்து‌ம் பேச்சு‌க்க‌‌ள் இறுதி செய்யப்படும் முன்பு, பேச்சு‌க்களின் ‌விவர‌ங்க‌ள் குழுவின் பார்வைக்கு வைக்கப்படும்".

இப்போது வரை, "பேச்சு‌க்களின் முடிவுகள்", அதாவது, ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமையுடன் நடத்திய இ‌ந்‌தியா‌வி‌ற்கான த‌னி‌த்த க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ன் பிரதி ஐ.மு.கூ.- இடதுசா‌ரிக‌ள் குழுவின் பார்வைக்கு கிடை‌க்கவில்லை.

அ‌ந்த‌ப் பிரதி இல்லாமல் குழு‌வினா‌ல் எந்தவித முடிவுக்கும் வர இயலாது.

குழு‌வி‌ன் உறுப்பினர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அந்தப் பிரதியை வழங்க மறுக்கும்போது ஜூலை 10-ஆம் தேதி சந்திப்பில் எந்தவித அர்த்தமும் இல்லை.

மேலும், பிரதமர் தனது அயல் நாட்டுப் பயணத்தின் போது, ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை ஆளுனர்கள் குழுவை வெகு விரைவில் சந்திக்கப்போவதாக அறிவிப்பு செய்துள்ளபோது, நீங்கள் முன்மொழிந்த ஜூலை 10-ம் தேதி கூட்டம் அர்த்தமற்றதாக்கப்பட்டுள்ளது.

ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை ஆளுனர்கள் குழுவை அரசு சந்திக்க முடிவு செய்தால் இடதுசாரிகள் அரசிற்கு அ‌ளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரதமரின் அறிவிப்பு வந்துள்ள நிலையில், "அந்த நேரம் வந்துவிட்டது."

இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இ‌தி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த், இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌‌ன் பொது‌ச் செயல‌ர் ஏ.‌பி.பரத‌ன், பா‌ர்வா‌‌ர்‌ட் ‌பிளா‌க் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய‌ச் செயல‌ர் தேப‌பிரத ‌பி‌ஸ்வா‌ஸ், ஆ‌ர்.எ‌ஸ்.‌பி. தலைவ‌ர் ச‌ந்‌திரசூத‌ன் ஆ‌கியோ‌ர் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்