இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய அளவிற்கு ஐ.மு.கூட்டணிக்கு எண்ணிக்கை பலம் உள்ளது என்று அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இரயில்வே அமைச்சரும், இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பிரச்சனையில் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டதால் ஐ.மு.கூட்டணி அரசிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எதுவும் மறைக்கப்படவில்லை என்று கூறிய லாலு, “எல்லாவற்றையும் இடதுசாரிகளிடம் காட்டி விட்டோம். நமது நாட்டின் நலனிற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானது. இது அமெரிக்கா மட்டுமே சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அணு தொழில் நுட்பத்தைப் பெறமுடியாத தனிமைபடுத்தப்பட்ட நிலையில் இந்தியா உள்ளது. அந்த நிலையிலேயே நீடிக்க முடியாது” என்று கூறினார்.
இடதுசாரிகளின் முடிவை விமர்சித்த லாலு, “அவர்கள் தாங்கள் அமர்ந்துள்ள கிளையையே வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.