இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி முடிவெடுத்திருப்பதற்கு, அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய தேச முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேச லோக் தள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேச லோக் தள் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை லோக் தள் கடுமையாக எதிர்க்கிறது என்றும், “அந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாக இந்தியா மாறுவது தங்களுக்கு கவலையளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
“ஐ.மு.கூ. ஆட்சிக்கு வந்த போது அதனை ஆதரித்து அவமானம் தேடிக் கொண்டது சமாஜ்வாடி கட்சி, இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு ஆதரவு தந்து அவமானத்தை சந்திக்கத் தயாராகி விட்டது. இது அவர்களின் சிந்தனைப் போக்காக உள்ளது” என்று செளதாலா கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் முடிவை கடுமையாக எதிர்த்து செளதாலா பேசியிருப்பது ஐக்கிய தேச முற்போக்குக் கூட்டணியில் ஏற்படவுள்ள பிளவிற்கு அச்சாரம் இட்டுள்ளது.