மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல்: வெங்கையா நாயுடு!
செவ்வாய், 24 ஜூன் 2008 (18:04 IST)
ஐ.மு.கூட்டணிக் கட்சிகளிடையில் பரஸ்பர ஒத்துழைப்பும் நம்பிக்கையும் குலைந்து விட்டதால், மக்களைவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
அவ்வாறு தேர்தல் வருமானால் அதைச் சந்திப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் பா.ஜ.க. தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஐ.மு.கூ. கட்சிகளிடையில் பரஸ்பர ஒத்துழைப்பும் நம்பிக்கையும் குலைந்து விட்டது. ஒருபுறம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. மறுபுறம், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மீது ஐ.மு.கூ. கட்சிகளிடையில் வாக்குவாதங்கள் அதிகரித்து விட்டன" என்றார்.
ஐ.மு.கூ. கட்சிகளிடையில் பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும். முன்கூட்டிய தேர்தலுக்காக பா.ஜ.க. அவசரப்படவில்லை. ஆனால் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் அதற்குத் தயாராகி வருகிறோம் என்றார் வெங்கையா நாயுடு.
ஐ.மு.கூ. கட்சிகள் அதிகாரத்திற்காக உயிரை விடுகின்றனர். இப்போது தேர்தல் வந்தால் விலைவாசி பிரச்சனையில் மக்களின் கோபம் வெளிப்படும் என்பதற்கு பயந்து முன்கூட்டிய தேர்தலைத் தவிர்க்க நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க.வின் மத்தியத் தேர்தல் குழு கூட்டம் ஜூன் 26 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது என்று தெரிவித்த வெங்கையா நாயுடு, இந்த ஆண்டில் நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் பற்றி இதில் திட்டமிடப்படும் என்றார்.