மத்திய அரசிற்கு ஆபத்தில்லை: டி.ஆர்.பாலு!
செவ்வாய், 24 ஜூன் 2008 (16:36 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய அரசிற்கு ஆபத்தில்லை என்று கூறியுள்ளார்.
அணுசக்தி உடன்பாடு தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் நடத்தி வரும் பேச்சின் ஒரு பகுதியாக இன்று தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலுவை சோனியா காந்தி சந்தித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பாலு, அரசு மற்றும் இடதுசாரிகள் ஆகிய இருவரின் கருத்துக்களும் தங்களுக்கு முக்கியம் என்று கூறியதுடன், முன்கூட்டியே தேர்தல் வரும் வாய்ப்புகளை மறுத்தார்.
புதன்கிழமை நடக்கவுள்ள ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டம் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், "பிரச்சனை ஒன்றிருந்தால், அதற்குத் தீர்வு ஒன்றிருக்கும். உறுதியாக அரசு அதைக் கண்டறியும்" என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்ட பாலு, "முன்கூட்டியே தேர்தல் வரும் என்று நான் நினைக்கவில்லை" என்றார்.
முன்னதாக நேற்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ராஷ்ட்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் சோனியா காந்தியைச் சந்தித்தனர்.