ஆகஸ்ட் 5ல் மகளிர் இடஒதுக்கீடு அறிக்கை சமர்ப்பிப்பு: சுதர்சன நாச்சியப்பன்!
செவ்வாய், 24 ஜூன் 2008 (11:16 IST)
மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று இக் குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் நேற்று கருத்து கேட்டது.
அதன் பின்னர் குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்களுக்கு கேள்விகள் அனுப்பி இந்த மாதம் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம்.
இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 2 விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். பெரும்பாலான அரசியல் கட்சிகள் தற்போதைய நிலையிலே மகளிர் இடஒதுக்கீடு சட்டமசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. பா.ம.க., ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும், திராவிடர் கழகமும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 12 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். எனவே, வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலே இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் ஒருமனதாக தெரிவித்தனர். வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.