வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் கடும் சேதம்: புத்ததேவ்!
வெள்ளி, 20 ஜூன் 2008 (19:06 IST)
மழை வெள்ளத்தினால் மேற்கு வங்கத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இரட்டை மாவட்டங்களான மிட்னாபூரில் 25 பேர் பலியாகியுள்ளதுடன் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேற்கு மிட்னாபூரில் 17 வட்டங்களும், கிழக்கு மிட்னாபூரில் 15 வட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன; இதில் 6 வட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேற்கு மிட்னாபூரில் 16 லட்சம் பேர் உள்பட இரண்டு மாவட்டங்களிலும் மொத்தம் 22 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் உதவிக்கு ராணுவம் அழைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த புத்ததேவ், மிக மோசமானப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் மருந்துகளும் ஹெலிகாப்டர்கள் மூலம் பொட்டலம் கட்டிப் போடப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேற்கு மிட்னாபூரில் சபாங் மற்றும் நாராயண்கார்க் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2லட்சம் மக்கள் 822 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்களும், 16,000 வீடுகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
வழக்கத்திற்கு மாறான அதிகபட்ச மழைதான் வெள்ளத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் புத்ததேவ், அரசியல் பார்க்காமல் அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதுடன் நிவாரணப் பணிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.