அணுசக்தி: சரத்பவார்- பிரகாஷ் காரத் சந்திப்பு!
வெள்ளி, 20 ஜூன் 2008 (17:13 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இன்று மத்திய விவசாயத் துறை அமைச்சரும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரைச் சந்தித்து, இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் எழுந்துள்ள நெருக்கடியான சூழல் குறித்து விவாதித்தார்.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் மீது இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு இடதுசாரிகள் தெரிவிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த சரத் பவார், மத்திய அரசின் நிலைப்பட்டை காரத்திடம் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.
அதற்கு காரத், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை அமல்படுத்துவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்காதவரை மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சரத் பவாரிடம் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று மாலை அணுசக்தி உடன்பாட்டினால் எழுந்துள்ள சிக்கல் குறித்து மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சுமார் ஒரு மணி நேரம் அமைச்சர் சரத் பவார் விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.மு.கூட்டணி உறுப்பினர்களுடன் விவாதித்த சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரியுடனும் நேற்று மாலை பேசினார்.