நாடு முழுவதும் தரமான உணவு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை!
புதன், 18 ஜூன் 2008 (16:13 IST)
நாடு முழுவதும் தரமான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சகம் கூறியுள்ளது.
அமைச்சகம் சார்பில் இந்த ஆண்டு (2008-09) மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் முயற்சிகள் வருமாறு:
1.நாடு முழுவதும் 10,000 தெருவோர உணவகங்களில் தரத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துவது
2.பாரம்பரியமாக உணவு விற்பனையில் ஈடுபட்டிருக்கும் 10 பகுதிகளில் உணவின் தரம், பாதுகாப்பை மேம்படுத்துவது. குடிநீர், மின்விளக்கு, சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர்களுக்கு செய்து தருவது
3.ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெறத்தக்க வகையில் உலகத் தரத்துடன் 10,000 உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைப்பது.
4.50 உணவு பாதுகாப்பு சோதனைக் கூடங்களின் தரத்தை உயர்த்துவது. அந்த கூடங்களில் சிறந்த வகையில் பரிசோதனைகளை மேற்கொள்வது
5.மாநிலம் ஒன்றுக்கு 500 பேர் என நாடு முழுவதும் 10 ஆயிரம் விவசாயகளை தேர்வு செய்வது. சிறந்த விவசாய முறைகளை மேற்கொள்வது மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்த அவர்களை ஊக்குவித்து தேசிய அளவில் சான்றிதழ் வழங்குவது
6.10 இறைச்சிக் கூடங்களை மேம்படுத்துவது. கடைகளுக்கு போய்ச் சேரும் வரையில் இறைச்சிகள் கெடாத வகையில் தொடர் குளிரூட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவது
7.சிறந்த உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள், சிறந்த வழிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குதல்
8.பயிர் இழப்பீடு காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்தல்
9.உணவுப் பொருட்களில் படிந்திருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவை கண்டறிந்து மாநில அளவில் ஆய்வு செய்தல்
10. உணவு பாதுகாப்பு குறித்த விவரங்கள் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் தரும் வகையில் சிறப்பு திட்டத்தை உருவாக்குதல்
11. பள்ளி பாடங்களில் உணவு பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை சேர்த்தல். இது குறித்த விவர கையேடு தயாரித்து மாணவர்களிடம் வழங்குதல்
12. 2008-09-ம் ஆண்டை உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துக்கான ஆண்டாக கடைபிடிப்பதை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடுதல். இந்திய சமையல் கலை பற்றி புத்தகம் வெளியிடுதல்.
இவை உள்பட பல்வேறு திட்டங்கள் மூலமாக உணவின் தரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சகம் கூறியுள்ளது.