உரத் தட்டுப்பாடு- நாடாளுமன்ற நிலை குழு நாளை கூடுகிறது!

புதன், 11 ஜூன் 2008 (16:39 IST)
உரம் தட்டுப்பாடு இல்லாமல் நாடு முழுவதும் எல்லா தரப்பு விவசாயிகளுக்கும் கிடைக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி ஆராய மத்திய இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் நிலைக் குழுவின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

கரிப் பருவத்திற்கு தேவையான உரம் கிடைக்கவில்லை என்ற புகார் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கவேரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் ஒன்று திரண்டு உரம் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் கூட்டத்தை கலைக்க காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு விவசாயி பலியானதுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உரம் வழங்க கோரி போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாவட்டத்தில் பதிந்தா மாவட்டத்திலும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் நடத்தும் போராட்டத்தால் பல மாநிலங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளுக்கு உரம் அனுப்ப முடியாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மத்திய அரசு உர ஆலைகளுக்கு வழங்க வேண்டிய மானியம் வழங்காத காரணத்தினால், அவைகள் உர உற்பத்தியை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் உலக அளவில் உரத்தின் விலை அதிகரித்துள்ளதால், மற்ற நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொட்டாசியம் உரத்திற்காக சென்ற வருடம் கொடுத்த விலையை விட மூன்று மடங்கு கொடுக்க சம்மதித்து சீனா இறக்குமதி சென்ற மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதே போல் அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடாவில் இருந்து தெற்காசிய நாடான பிலிப்பைன்ஸ் வரை உர விலை அதிகரித்துள்ளது. உரம் தயாரிப்பதற்கு நாப்தா போன்ற எரிபொருட்களின் செலவு அதிகரித்துள்ளதால் உரத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு வருடத்திற்கு 480 லட்சம் டன் உரம் தேவை. இதில் 140 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் யூரியா, நைட்ரஜன், பொட்டாஸ், பாஸ்பேட் ஆகிய நான்கு வகை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. உர ஆலைகளின் உற்பத்தி செலவுக்கும், அவை விற்பனை செய்யும் விலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மத்திய அரசு உர ஆலைகளுக்கு மானியமாக வழங்குகின்றது.

தற்போது தேவைப்படும் உரத்தில் 70 விழுக்காடு மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சிவசேனாவின் மக்களவை உறுப்பினரும் இரசாயண மற்றும் உர அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரான ஆனந்த் ஜி.கீடி கூறுகையில், உரத்திற்கு எப்போதுமே தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பொழும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழை காலங்களில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவித்தார்.

இந்த கரிப் பருவத்தில் பருவமழை நன்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நடவு பணிகளை துவக்க உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு தானிய உற்பத்தி குறைந்தால், ஏற்கணவே அதிகரித்துள்ள உணவு தாணியங்களின் விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறும் உர அமைச்சகத்தின் நிலைக்குழுவின் சிறப்பு கூட்டத்தில் உர விநியோகம், தட்டுப்பாட்டை போக்குவது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்