எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய உயர்மட்டக் குழு: பிரதமர்!
வியாழன், 5 ஜூன் 2008 (17:46 IST)
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் இழப்பைச் சந்தித்துள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய உயர்மட்டக் குழு ஒன்றினை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.
மத்தியத் திட்டக்குழு உறுப்பினர் பி.கே.சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் சுமித்ரா செளத்ரி, இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் வீரமணி ஆகியோர் உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலையில் 2004- 05 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உயர்வினால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி இக்குழு ஆய்வு செய்யும்.
மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வரவு, செலவு மற்றும் கடன்சுமை ஆகியவை பற்றியும், கச்சா எண்ணெய் விலை உயர்வினால் இந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வழிமுறைகள் பற்றியும் இக்குழு ஆய்வு செய்யும்.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள், அவர்கள் சிக்கலின்றி இயங்குவதற்குத் தேவையான நிதியளவு பற்றியும் இக்குழு மதிப்பீடு செய்யும்.