பெட்ரோல், டீசல் மீதான வரியை நீக்கக் கோரிக்கை!

வியாழன், 5 ஜூன் 2008 (13:44 IST)
பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கும் வரிகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நீக்க வேண்டும் என்று இந்திய சமூக மேம்பாட்டு கழகம் கூறியுள்ளது.

புதுச்சேரியில் இயங்கும் இந்திய சமூக மேம்பாட்டு கழகத்தின் தலைவர் வி.ஏ. வாசுதேவ ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை குறைக்கவும், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை அல்ல

பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்பான விஷயத்தில் அரசின் நடவடிக்கை தற்காலிக தீர்வாகவே உள்ளது. உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காது எனறு உறுதியாக கூறமுடியாது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் சமமாக பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றின் தவறான வரி விதிப்பு கொள்கையே, இவைகளின் விலை உயர்வுக்கு காரணம்.

பெட்ரோலின் உண்மையான அடக்க விலை 1 லிட்டர் ரூ.21.93 பைசா. இதன் மீது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து ரூ.22.37 பைசா வரி விதிக்கின்றன. இதே போல் டீசலின் உண்மையான அடக்க விலை ரூ. 22.46. இதன் மீது இரு அரசுகளும் ரூ.8.52 வரி விதிக்கின்றன.

இவற்றின் மீது வரி விதிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.71 ஆயிரம் கோடியம், மாநில அரசுகளுக்கு ரூ.62,000 கோடி வருவாய் கிடைக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசலை அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களாக கருத வேண்டும். இதை மற்ற வகை பொருட்களுக்கு சமமாக கருதி வரி விதிக்க கூடாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எல்லா பொருட்களின் விலையும் அதிகரிக்கும். போக்குவரத்து போன்ற கட்டணங்களும் உயரும். எனவே இரு அரசுகளும் பெட்ரோலிய பொருட்களின் மீது வரி விதிப்பதை கைவிட வேண்டும். அரசின் வருவாய்க்கு வேறு மாற்று வழிகளை முயற்சிக்க வேண்டும் என்று வாசுதேவ ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இவர் புதுச்சேரி பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்