பெட்ரோல் விலை உயர்வுக்கும், அதன் மீதான வரி குறைப்பையும் வர்த்தக மற்றும் தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
மத்திய அரசு பெட்ரோலிய கச்சா எண்ணெயின் மீதான இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இதோ போல் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், உயர்வேக டீசல் மீதான இறக்குமதி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து 2.5 விழுக்காடாக குறைத்துள்ளது.
இதேபோல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளது.
இது குறித்து அசோசெம் என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பின் தலைவர் சாஜன் ஜிந்தால் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வை, இதனைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இந்த விலை உயர்வை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் சுமையை எல்லா தரப்பினரும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு குறையும்.
இத்துடன் மாநில அளவில் பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியை மாற்றி அமைப்பதன் வாயிலாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.
மானிய விலையில் டீசல், சமையல் எரிவாயு, மண் எண்ணெய் ஆகியவைகளை மானிய விலையில் வழங்குவதை விட, இதை பெறும் தகுதி உடையவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கலாம் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. அப்போது உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 67 டாலராக இருந்தது.