பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3, சமையல் எரிவாயு ரூ.50 உயர்த்தப்பட்டது!
புதன், 4 ஜூன் 2008 (16:05 IST)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலின்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலுக்கு ரூ.21.43 பைசா உயர்த்தப்பட வேண்டும். ஆனால் அரசு ஐந்து ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளது. டீசலின் விலை லிட்டருக்கு ரூ.31.58 பைசா உயர்த்தப்பட வேண்டும். இதன் விலை ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.353 உயர்த்தப்பட வேண்டும் இதன் விலை ரூ.50 மட்டுமே அதிகரித்துள்ளதாக முரளி தியோரா தெரிவித்தார்.
இவற்றை பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதால், இந்த நிதி ஆண்டில் அவைகளுக்கு ரூ.2,45,305 கோடி நஷ்டம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய விலை உயர்வால் இந்த நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.21,123 கோடி வருவாய் கிடைக்கும்.
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு ரூ.94,601 கோடி மதிப்பிற்கு ஆயில் பாண்ட் எனப்படும் கடன் பத்திரங்களை வழங்கும்.
அத்துடன் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு (ஒ.என்.ஜி.சி.) நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும். இந்த வகையில் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடி நஷ்டம் ஈடுகட்டப்படும்.
பெட்ரோலிய பொருட்களின் அடக்க விலையை குறைக்கும் வகையில் இவற்றின் மீதான இறக்குமதி, உற்பத்தி தீர்வைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு முன்பு ஐந்து விழுக்காடு இறக்கமதித் தீர்வை விதிக்கப்பட்டது. இது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், உயர்வேக டீசல் ஆகியவற்றின் மீதான இறக்குமதித் தீர்வை 7.5 விழுக்காட்டில் இருந்து 2.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தித் தீர்வை லிட்டருக்கு ரூ.1 குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரி நீக்கம், வரி குறைப்பு நடவடிக்கைகளால், மத்திய அரசுக்கு இந்த நிதி ஆண்டு ஜூன் முதல் மார்ச் 09 வரையிலான பத்து மாத காலத்திற்கு ரூ.22,660 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவு செயலாளர் பி.வி. பீடே தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இவற்றின் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்ற கருத்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பல மாநிலங்களில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 20 விழுக்காடும், டீசல் மீதான விற்பனை வரி லிட்டருக்கு 15 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.
இதனை மாநில அரசுகள் குறைப்பதன் மூலம், பெட்ரோல் ,டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என்ற கருத்தும் உள்ளது.
மாநில அரசுகளின் வரி வருவாயில், பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை விரி வருவாய் கணிசமான பங்காக இருக்கின்றது.
மத்திய அரசுக்கு சென்ற நிதி ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி வரி மூலம் ரூ.51,922 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதற்கு சமமாக மாநில அரசுகளுக்கு விற்பனை வரி மூலம் ரூ.56,115 கோடி வருவாய் கிடைத்துள்ளது.