ஸ்டேட் வங்கி அதிகாரிகள் ஜூன் 6 இல் வேலை நிறுத்தம்!
செவ்வாய், 3 ஜூன் 2008 (16:19 IST)
புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் வருகிற 6 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.
அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படவுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், நமது நாடு முழுவதும் உள்ள 10,000 ஸ்டேட் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 60,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தற்போதுள்ள பல்வேறு பிரச்சனைகளும், முன்பு நடத்தப்பட்டுள்ள பல்வேறு பேச்சுக்களில் எட்டப்பட்ட தீர்வுகள் இன்னும் நடைமுறைக்கு வராமலிருப்பதும் எங்களைப் போராட்டத்திற்குத் தள்ளியுள்ளது என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் ஹைதராபாத் வட்டத் தலைவர் டி.கிருஷ்ண குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஓய்வூதியத் திட்ட மேம்பாடு, தங்கள் சொந்த வீடுகளில் தங்கியுள்ள அதிகாரிகளுக்கு கூடுதல் வாடகை, காலியாக பணியிடங்களை நிரப்புதல், அதிகாரிகளின் பணி நேரத்தை முறைப்படுத்துதல், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை நிரந்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.