பெட்ரோல், டீசல் விலையேற்றம்- அமைச்சரவை கூட்டம் மீண்டும் தள்ளிவைப்பு!

சனி, 31 மே 2008 (18:52 IST)
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த இன்று கூடுவதாக இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தற்பொழுது கச்சா விற்கப்படும் விலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தாவிட்டால், கச்சா இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி இருக்காது என்ற நிலையில், இன்று கூடுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் விலையேற்றம் குறித்து ஒத்த கருத்து ஏற்படாத்தே என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ரூபாயின் பணவீக்கம் கடந்த 45 மாதங்களில் எட்டாத அளவிற்கு 8.1 விழுக்காடாக உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது பணவீக்கத்தை மேலும் உயர்த்திவிடும் என்பதாலும் முடிவு தள்ளிவைக்கப்பட்டதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பால் உருவாகியுள்ள கடும் நெருக்கடியை விவரித்த எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர், “நோயாளி இறந்த பிறகுதான் சிகிச்சை பற்றி முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது” என்று கூறியவர், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி உடனடியாக இச்சிக்கலை சமாளிக்காவிட்டால் பாரத் பெட்ரோலியம், இந்துஸதான் பெட்ரோலியம் ஆகிய இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் கச்சா வாங்குவதற்கு நிதி இருக்காது என்று கூறினார்.

தற்பொழுது நிலவிவரும் கச்சா விலைப்படி, ஒரு லிட்டருக்கு பெட்ரோல் ரூ.16.34, டீசல் ரூ.23.49, மண்ணெண்ணெய் ரூ.28.72, சமையல் எரிவாயு உருளை ரூ.305.90 நட்டத்திற்கு விற்கப்படுவதாகவும், இதனால் நாள் ஒன்றிற்கு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.580 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்