பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சனிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை குறைக்க பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் கோரி வருகின்றன.
பொது மக்களை அதிகம் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தை குறைக்கவும், இறக்குமதி வரி, உற்பத்தி வரியை நிதி அமைச்சகம் குறைக்க வேண்டும் என பெட்ரோலிய அமைச்சகம் கூறிவருகிறது.
இந்த வரிகளை குறைப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சம்மதம் தெரிவிக்காமல் உள்ளார். ஏற்கெனவே இது தொடர்பாக இரண்டு அமைசசகத்தின் உயர் அதிகாரிகள் பல முறை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தை குறைப்பது குறித்தும், விலை உயர்வு குறித்தும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, திட்ட குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரமரும், நிதி அமைச்சரும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு பற்றியும், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு பற்றிய தகவல்களை ஆராய்ந்தனர். பொதுத்துறை நிறுவனங்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்நதுள்ளனர். இதில் (விலை உயர்வு) நாளை மறுநாள் முடிவு எட்டப்படும்.
இன்றைய கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சரவை என்ன முடிவு எடுக்கும் என்பதை என்னால் கூற முடியாது என்று முரளி தியோரா தெரிவித்தார்.
இன்று மத்திய அமைச்சரவையின் கூட்டம் பெட்ரோல் விலை உயர்வு பற்றி முடிவு எடுக்க நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டமும் சனிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், இந்த நிதி ஆண்டில் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.2,25,000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இறக்குமதி வரி, உற்பத்தி வரியை குறைப்பதுடன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10ம், டீசல் விலையை ரூ.5 அதிகரிக்க வேண்டும். அதே போல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறிவருகிறது.
இதன் விலைகளை அதிகரிக்காவிட்டால், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பெட்ரோலிய நிறுவனங்களிடம் பணம் இருக்காது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.