ராஜஸ்தானில் 10 பேர் சுட்டுக் கொலை: காவல் நிலையத்திற்கு தீ வைப்பு!
சனி, 24 மே 2008 (20:05 IST)
ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.
டெளசா மாவட்டத்தில் சிக்கெந்திரா என்ற இடத்தில் இன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
இத்துடன் ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக குஜ்ஜார் இனத்தவர் நடத்திவரும் போராட்டங்களில் வெடித்த கலவரங்களுக்கும், அதைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கும் 26க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் வரை காலவரையின்றிப் போராட்டம் நீடிக்கும் என்று குஜ்ஜார் அரக்கசான் சங்கார்ஸ் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிரோரி சிங் பைன்ஸ்லா தெரிவித்தார்.
இதுகுறித்துப் பில்புரா என்ற இடத்திலிருந்து பி.டி.ஐ. நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசிய பைன்ஸ்லா, "மாநில அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் எங்களின் போராட்டம் காலவரையின்றித் தொடரும்" என்று தெரிவித்ததுடன், குஜ்ஜார் இனத்தவரின் மேம்பாட்டிற்காக அரசு அறிவித்துள்ள ரூ.282 மதிப்பிலான நிவாரணத் திட்டம் தங்களுக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
நிவாரணத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை அதிகரிக்கப்பட்டால் போராட்டம் கைவிடப்படுமா என்று கேட்டதற்கு, "இல்லை. ஒருபோதும் முடியாது" என்றார் அவர்.
ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பினால் மாநிலமே சோகத்தில் இருக்கும்போது, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி போராட்டத்தைத் துவக்கினீர்களா என்று கேட்டதற்கு, "குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் எங்கள் பாதிப்புகளையும் கொஞ்சம் கேளுங்கள்" என்றார் பைன்ஸ்லா.
பாரத்பூர் மாவட்டத்தில் நேற்று போராட்டம் நடத்தியவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நடந்த மோதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில் இவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.