பெட்ரோல் விலை உயர்த்த காங்கிரஸ் எதிர்ப்பு!

சனி, 24 மே 2008 (17:26 IST)
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசலின் விலையை உயர்த்தாமல், இதன் மீது விதிக்கப்படும் வரியை குறைத்தால், அதிக அளவு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என பெட்ரோலிய அமைச்சகம் கருதுகிறது.

பெட்ரோலிய துறை செயலாளர் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முழுமையாக நீக்கவும், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து, 2.5 விழுக்காடாக குறைக்கும்படியும் பெட்ரோலிய அமைச்சகம் கூறி வருவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த ஆலோசனையை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

நேற்று மாலை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் தலைமையில், நிதித்துறை செயலாளர் டி.சுப்பாராவ், பெட்ரோலியத் துறை செயலாளர் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன், மூன்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் ஆந்திர மாநில உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.ஸ்ரீனிவாஸ் பேசும்போது, நாங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை எதிர்க்கின்றோம். இது சம்பந்தமாக நானும், முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியும் எங்கள் கருத்தை மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, விலையை உயர்த்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இதில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இந்த நேரத்தில் விலையை உயர்த்தினால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்

முதல்வர் ராஜசேகர ரெட்டி ஏற்கனவே மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோராவிடம் பேசியுள்ளார். அவரிடம் பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் படி கூறியுள்ளார் என்று டி.ஸ்ரீனிவாஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்