குஜ்ஜார்கள் உடல்களுடன் போராட்டம்: ராஜஸ்தானில் பதற்றம்!
சனி, 24 மே 2008 (16:56 IST)
தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்களுடன் குஜ்ஜார் இனத்தவர் தர்ணாவில் இறங்கியதால் ராஜஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாரத்பூர் மாவட்டத்தில் துமாரியா ரயில் நிலையம் அருகில் குழுமிய 3,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், துப்பாக்கிச் சூடில் பலியான 9 பேரின் உடல்களுடன் டெல்லி- மும்பை இருப்புப் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அதைத்தடுக்க முயன்ற காவலர்களின் மீது கற்களையும், கைகளில் கிடைத்த பொருட்களையும் வீசித் தாக்கினர்.
மேலும், நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு காவலர்களை அவர்கள் சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கலவரத்தில் காவலர்களின் வாகனம், ஊடகத்தினரின் வாகனம் என இரண்டு வாகனங்களுக்கு தீயிடப்பட்டது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியாக ராணுவம், துணை ராணுவம், மத்திய அதிரடிப் படை, மத்திய ரிசர்வ் காவல்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், குஜ்ஜார் இடஒதுக்கீட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் ஜலாவர், கோட்டா, கிஷன்கார்க், சிக்கன்தரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
கலவரத்தில் காவலர் ஒருவர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியாவும், மாநிலக் காவல்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 3 காவலர்கள் உள்பட 19 பேர் பலியாகியுள்ளதாக மாநிலக் காங்கிரஸ் கமிட்டி தெரிவிக்கிறது. உள்ளூர் ஊடகங்கள், 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு பற்றி நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.