ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த ஹூஜி (ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி) என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியை டெல்லியில் காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். அவனிடம் இருந்து 3.1 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 65 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு நிகழ்வில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதி ஒருவரை புதுடெல்லி ரயில் நிலையத்துக்குச் செல்கின்ற கெம்ஃபோர்டு சாலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த அவனது பெயர் அப்துல் ர்ஹமான் என்றும், அவன் மேற்கு டெல்லியிலுள்ள ஜானக்பூரில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறையில் நடத்திய சோதனையில் 3.1 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
கைதான தீவிரவாதி பற்றிய முழுவிவரத்தை வெளியிட மறுத்துவிட்ட காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் அப்துல் ரஹ்மான் பிடிபட்டதாக, காவல்துறை தெரிவித்துள்ளனர்.