விலைவாசி உயர்வு, அணுசக்தி உடன்பாடு: மத்திய அரசிற்கு இடதுசாரிகள் நெருக்கடி!
புதன், 21 மே 2008 (13:19 IST)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை ஆய்வு செய்வதற்காகக் கூடவுள்ள இடதுசாரிகள், விலைவாசி உயர்வு, அணுசக்தி உடன்பாடு ஆகிய விடயங்களில் புதிய நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிகள், விலைவாசி உயர்வு, இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு ஆகிய விடயங்களில் ஏற்கெனவே நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். ஆதரவை விளக்கிக் கொள்வோம் என்பதுவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்,பி., ஃபார்வர்ட் பிளாக் ஆகிய 4 கட்சிகளின் தலைவர்களும் மே 23ஆம் தேதி கூடி, மத்திய அரசு தனது 4 ஆண்டு காலத்தில் செய்த சாதனையாக கூறியுள்ளவற்றை மறுஆய்வு செய்கின்றனர்.
இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் உடல்நிலையைப் பொறுத்தே இக்கூட்டம் நடக்கும் என்று இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.