சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு குறைந்தபட்ச மாற்று வரியை விதிக்க சி. ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு உற்பத்தி வரி, வருமான வரி விலக்கு உட்பட பல்வேறு சலுகைககள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரியான வரிச்சலுகை வழங்குவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இங்கு அமைந்துள்ள நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறிவருகிறது.
ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு வரி விதிப்பதற்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு வரி விதிப்பதில் நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பற்றி, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு ஆய்வு செய்தது.
(பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, பிரபல பொருளாதார மேதையும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி.ரங்கராஜன் தலைமையில் செயல்பட்டு வருகிறது).
இந்த ஆய்வுக்கு பிறகு, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு குறைந்த பட்ச மாற்று வரியாக 10 விழுக்காடு விதிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
நிதி அமைச்சகம், இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள், உற்பத்தி செய்யும் பொருட்களில் குறைந்தபட்சம் 51 விழுக்காடு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கூறியதை குழு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கு பதிலாக இந்த மண்டலங்களில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு, 10 விழுக்காடு குறைந்த பட்ச மாற்று வரி விதிப்பதன் மூலம், இவை உள்நாட்டில் விற்பனை செய்வதால் ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்டலாம் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் இந்த குழு, சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களின் உற்பத்தி குறைவாக இருக்கின்றது. ஆதலால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு உச்சவரம்பு விதிக்க கூடாது என கூறியுள்ளது.